"தோடுடைய செவியன் விடையேறி ஓர்

தூ வெண்மதி சூடிக்

காடுடைய சுடலைப் பொடி பூசி

என் உள்ளம் கவர் கள்வன்

ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்து

ஏத்த அருள் செய்த

பீடுடைய பிரமாபுரம் மேவிய

பெம்மான் இவன் அன்றே.'

எனத் தொடங்கும் தேவாரப் பதிகப் பாடலை சுமார் மூன்று வயதில் ஆளுடைய பிள்ளையார் என்கிற திருஞான சம்பந்தர், புலவர் ஒட்டக் கூத்தரும், அருணகிரிநாதரும் சொன்னதுபோன்று, முருகப் பெருமானின் திருவவதாரமாக சுமார் ஏழாம் நூற்றாண்டில் சோழ வள நாட்டின் சீர்காழி (சீகாழி) எனும் ஊரில் பிறந்து, அன்னை உமாதேவியாரின் ஞானப்பாலை உண்டதால் மேற்படி பாடலைப் பாடினார் என்கிற செய்தி அனைவரும் அறிந்ததே!

Advertisment

sev

பெரிய நாயகி சமேத சட்டைநாதர் திருக்கோவில் வளாகத்தில் இருக்கும் பிரம்ம தீர்த்தக் குளத்தில்தான் இந்த உலக அதிசய தெய்வீக நிகழ்வு நடந்தது. தொன்மையும், வரலாற்று சிறப் பும் வாய்ந்த இக்கோவில் இன்று தருமையாதீனத் தின் அருளாட்சியின்கீழ் செயல்பட்டுவருகிறது. இக்கோவிலின் மகாகும்பாபிஷேகம் இம்மாதம் 24-ஆம் தேதி புதன்கிழமையன்று (24-5-2023) காலையில், தருமையாதீனத்தின் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் முன்னிலையில் நடக்கவுள்ளது.

தமிழகத்தில் ஏறத்தாழ 4- 6-ஆம் நூற்றாண்டில் பல்லவர் ஆட்சிபுரிந்த காலம். தமிழகத்தின் வடகிழக்குப் பகுதியான தொண்டை மண்டலத்திலிருந்து தங்களது ஆட்சியை செலுத்தினார்கள். அந்த காலகட்டத்தில் அரசியல், கலாச்சார தலைநகரமாக காஞ்சிபுரம் விளங்கியது. சமண சமயம் (Jainism)பல்லவர்கள் காலத்தில் தமிழகத்தில் பரவியிருந்தது. மகேந்திரவர்மர் கி.பி. 600-ல் பல்லவ மன்னராக பொறுப்பேற்றார். இவரது ஆட்சிக் காலத்தில் சமண சமயம் தழைத்தோங்கியது. அதன்பின் ஆண்ட பல்லவ மன்னர்கள் சமண சமயத்தை ஆதரித்தனர்.

ss

Advertisment

அதேபோன்று அந்த காலகட்டத்தில் பாண்டிய மன்னர்களும் சமண சமயத்தை ஆதரித்தனர். அந்நாட்டு மக்கள் சிலர் பௌத்த சமயத்தைப் பின்பற்றிவந்தனர்.

அதில் குறிப்பாக பராங்குச மாறவர்மர் என்கிற பாண்டிய மன்னர் ஆரம்பத்தில் சமண சமயத்தை ஆதரித்தார். சமண பௌத்த சமயத்தின் ஆதிக்கத்தால் சைவ சமயம் சற்று நிலைகுன்றியிருந்த காலத்தில், சைவ நெறியைத் தழைத்தோங்க சிவபிரானின் திருவருளுடன் தமிழ்நாட்டில் சீர்காழியில் திருஞானசம்பந்தரின் அவதாரமும், கேரள மாநிலத்தில் காலடியில் ஆதிசங்கரரின் அவதாரமும் ஏற்பட்டது என்றால் மிகையாகாது. இதைத் தான் திருத்தொண்டர் புராணத்தில் சேக்கிழார்-

"வேதநெறி தழைத்தோங்க

மிகுசைவத் துறைவிளங்கப்

பூதபரம் பரைபொலியப்

புனிதவாய் மலர்ந்தழுத

சீதவள வயற்புகலித்

திருஞான சம்பந்தர்

பாதமலர் தலைக்கொண்டு

திருத்தொண்டு பரவுவாம்'

எனப் பாடினார்.

சிவபாத ஹிருதயர், பகவதியார் என்கிற தம்பதியினர் சீர்காழி பகுதியில் வாழ்ந்துவந்தனர். இத் தம்பதியினருக்கு சீர்காழியில் குடிகொண்ட சிவபெருமானின் ஆசியால் திருவாதிரை நட்சத்திர நன்னா ளில்-

"பெருத்தெழும் அன் பாற்பெரிய நாச்சியா ருடன்புகலித்

திருத்தோணி வீற்றிருந்தார் சேவடிக்கீழ் வழிபட்டுக்

கருத்துமுடித் திடப்பரவும் காதலியார் மணிவயிற்றில்

உருத்தெரிய வரும்பெரும்பே றுலகுய்ய உளதாக'

Advertisment

என்கிற சம்பந்தரின் அவதாரத்தைக் குறித்த பாடலின்படி, உலகம் உய்ய ஆண் குழந்தை ஆளுடையப்பிள்ளையார் என்கிற பெயரில் பிறந்தது. இறை அம்சம் நிரம்பிய இப் பிள்ளை தனது மூன்றாம் வயதில், ஒருநாள் தந்தை யார் சிவபாதருடன் இல்லத்திற்கு அருகே இருந்த சிவபெருமான் கோவிலுக்குச் (இன்றைய சட்டைநாதர் ஆலயம்) சென்றனர். பிரம்மதீர்த்தக் குளக்கரையில் தனிமையில் இருந்த குழந்தை அழ, இறைவன் சிவபெருமானும், இறைவி உமாதேவியும் இடப வாகனத்தில் குழந்தைமுன்பு தோன்றி, தேவியார் தனது திருமுலைப்பாலை ஊட்ட, குழந்தை அழுவதை நிறுத்தியது. ஞானப்பாலை அருந்தியதால் ஆளுடையப் பிள்ளையார் "திருஞான சம்பந்தர்' என பக்தியுடனும், மரியாதையுடனும் அழைக்கப்பட்டார்.

dd

ஞானப்பாலை உண்டதால் சம்பந்தருக்கு சிவனையே சிந்திக்கும் ஞானம், பவத்தை (பிறப்பு) அடியோடு மாற்றும் ஞானம், கலைஞானம், மெய்ஞ்ஞானம் என நான்கு வகை ஞானங்கள் வந்தன. இதைத்தான் சேக்கிழார் தனது பாடலில்-

"சிவன் அடியே சிந்திக்கும்

திருப்பெருகு சிவஞானம்

பவமதனை அறமாற்றும்

பாங்கினில் ஓங்கிய ஞானம்

உவமையிலாக் கலைஞானம்

உணர்வரிய மெய்ஞ்ஞானம்

தவமுதல்வர் சம்பந்தர்

தாம் உணர்ந்தார் அந்நிலையில்'

எனப்பாடி புகழ்ந்துள்ளார்.

இத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவனுக்கு சட்டைநாதர், பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர் என்கிற திருப்பெயர்கள் உண்டு. இறைவிக்கு பெரிநாயகி, திருநிலை நாயகி, ஸ்திர சுந்தரி என்கிற திருப்பெயர்கள் உண்டு. அதேபோல் இன்றைய சீர்காழிக்கு பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, காழி (காளி), கொச்சைவயம், கழுமலம் என்னும் பன்னிரண்டு திருப் பெயர்கள் உண்டு. முற்காலத்தில் இத்தலத் தின் பெருமையைச் சொல்லும்போது, "காசியால் பாதி காழி' எனச் சொல்வ துண்டு. அதாவது சீர்காழி, காசியைக் காட்டிலும் மிகப்பெரிய பைரவர் தலம். எனவே காசியில் தரிசனம் செய்தால் கிட்டும் புண்ணியம் இத்தலத்திற்கும் உண்டு.

இத்தலத்தில் திருஞான சம்பந்தர் உற்சவ மூர்த்தியாக பிரம்மபுரீஸ்வரர் சந்நிதிக்கு அருகே உள்ளார். சிறிய குழந்தை வடிவில் இடது கையில் சிறு கிண்ணம் ஏந்திய வண்ணம் காட்சிதருகி றார். 18 சித்தர்களில் ஒருவரான சட்டை முனி சித்தரின் ஜீவசமாதி இத்தலத்தில் இருப்பது சிறப்பாகும்.

சிவப்பேறு பெறவும், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் தேவாரப் பாடல்கள் அருளிய பெரியநாயகி சமேத ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி திருக் கோவிலின் (சோமஸ்கந்த தலம்) மகா கும்பாபிஷேகத்தை பக்திப் பரவசத்துடன் கண்டுமகிழ சீர்காழிக்குச் செல்வேம்!